திருக்கோவிலூர் நகராட்சியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
திருக்கோவிலூர் நகராட்சியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை நகரமன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா முன்னிலையில் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கீதா, நகராட்சி பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வழிகாட்டுதல்படி நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கீதா கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி திருக்கோவிலூர் நகராட்சியில் தூர்வாரும் பணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலைமை இருந்தால் உடனடியாக நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். இந்த பணியை 100 சதவீதம் முழுமையாக செய்து முடித்திட பொதுமக்களும் ஆதரவு அளித்திட வேண்டும் என்றார்.