ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் டி.ஐ.ஜி.முத்துசாமி வழங்கினார்


ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் டி.ஐ.ஜி.முத்துசாமி வழங்கினார்
x

தொலைந்த, திருட்டுபோன ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்களை போலீசார் மீட்டனர். அவற்றை உரியவர்களிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்.

வேலூர்

தொலைந்த, திருட்டுபோன ரூ.40 லட்சம் மதிப்புடைய 210 செல்போன்களை போலீசார் மீட்டனர். அவற்றை உரியவர்களிடம் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்.

செல்போன்கள் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி கலந்துகொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்க செல்போன் டிராக்கர் என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணின் மூலம் தொலைந்த மற்றும் திருட்டுப் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் கடந்த ஜூலை மாதம் 162 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக ரூ.40 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 372 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை குறைக்க...

செல்போன்களை கண்டுபிடிக்க பாடுபட்ட மாவட்ட காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசாரை பாராட்டுகிறேன். வேலூர் சரகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற்றுள்ளது. மேலும் கொலை, கொள்ளை முயற்சி, திருட்டு போன்ற குற்ற செயல்கள் குறைந்துள்ளன. ஆனால் விபத்துகள் 4 சதவீதம் அதிகரித்துள்ளது, கவலை அளிக்கிறது. விபத்துகள் ஏற்படாத வண்ணம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் சரகத்தில் 106 இடங்கள் விபத்துகள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

போக்சோ வழக்குகளில் அக்கறை செலுத்தி வருகிறோம். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படுகிறது.

போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வருகிறேன். இந்த வழக்கில் உரிய கவனம் செலுத்தாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் நடவடிக்கை

வடக்கு மண்டல ஐ.ஜி.யின் 'இமைகள்' திட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. குழந்தைகள் தொடர்பாக வரப்பெறும் மனுக்கள் குறித்து விசாரணை செய்வதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். அவ்வாறு தாமதம் ஏற்படுத்தினாலோ, கட்ட பஞ்சாயத்து செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை குறைந்து வருகிறது. வேலூர் மாவட்டம் கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். 34 சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சரகத்தில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், கவுதமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story