மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பால் மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.
சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
இணைப்பது கட்டாயம்
தற்போது வங்கிக் கணக்கு எண், வருமானவரி கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையதளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.
ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.
அமைச்சர் விளக்கம்
தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, 'ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும்போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.
எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.
பாதிப்பு ஏற்படக்கூடாது
இதுகுறித்து மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
நெல்லையை சேர்ந்த விஜயகுமார்:-
மின்இணைப்புடன் ஆதாரை இணைக்குமாறு கூறி உள்ளனர். இது ஒரு டிஜிட்டல் முன்னேற்ற நடவடிக்கை ஆகும். பெரும்பாலான மக்கள் ஆதாரை இணைத்து வருகிறார்கள். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
பாளையங்கோட்டையை சேர்ந்த நவீன்:-
மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பது தேவையற்ற விஷயம் ஆகும். ஏற்கனவே மின்கணக்கீடு, மின்கட்டணம் செலுத்துதல் போன்றவை நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. ஆதாரை இணைப்பதால் பொதுமக்களுக்கும், மின்சார வாரியத்துக்கும்கிடைக்கும் நன்மை குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. எனவே, முதலில் மாதந்தோறும் மின்கட்டண கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை விடுத்து இருக்கிற 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் பறித்துக் கொள்ளாதீர்கள்.
6 மாதம் காலஅவகாசம்
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மார்ஷெல்:-
மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை விலக்கிக் கொள்ள வேண்டும். அல்லது இதற்கு 6 மாதங்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும்.
ஓவிய ஆசிரியர் ஒற்றிரன் பர்னாண்டோ:-
ஆதாரை இணைத்தால்தான் மின்கட்டணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க சொன்னார்கள். அப்போதே இந்த பணியையும் செய்து இருக்கலாம்.
குழப்பம்
தென்காசி சிவந்திநகரை சேர்ந்த ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன்:- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற சலுகை கிடைக்க வேண்டும். அதற்காகவே, மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுவதாக நான் கருதுகிறேன். இதை நான் வரவேற்கிறேன்.
தென்காசி அருகே மேலகரம் மின்நகர் பகுதியைச் சேர்ந்த ராமசுந்தரமணி:-
மின்இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் யாருக்கு என்ன பயன்? எதை எடுத்தாலும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கூறும் அரசு அதை இணைப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று ஏதாவது கூறுகிறார்களா? ஆதாரை இணையுங்கள் என்று கூறிவிட்டு அதனை கட்டாயப்படுத்துகிறார்கள். வீட்டின் உரிமையாளர், வாடகைக்கு இருப்பவர் என்று யார் பெயரை வேண்டுமானாலும் இணைக்கலாம் என்று கூறினாலும், அவர்களுக்குள் யார் பெயரை இணைப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மின்வாரியம் ஆராயுமா?
மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்று அறிவிப்பால் மின் நுகர்வோர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபராத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.