சென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


தினத்தந்தி 15 Feb 2024 10:36 AM IST (Updated: 15 Feb 2024 10:51 AM IST)
t-max-icont-min-icon

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைதுசெய்தனர்.

சென்னை,

தமிழக அரசின் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை மாற்று திறனாளிகளுக்கான ஒரு சதவீத உள் ஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே திடீரென ஆற்காடு சாலையில் இரு திசைகளிலும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரையிலும் அதே போன்று ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி வரையிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்த நிலையில், இன்று சென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைதுசெய்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story