ஓசூரில்சிமெண்டு குழாயில் தலை மோதி 1½ வயது குழந்தை பலி
ஓசூர்:
ஓசூரில் சிமெண்டு குழாயில் தலை மோதி 1½ வயது குழந்தை பலியானது.
1½ வயது குழந்தை
உத்தரபிரதேச மாநிலம் மிர்ஜாபுரி மாவட்டம் சிப்புரியை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி சாந்தா (வயது 48). இவர்களுக்கு 1½ வயதில் ராவிணி என்ற ஆண் குழந்தை இருந்தது. தினேஷ் தனது மனைவி, மகனுடன் ஓசூரில் உள்ள மத்தம் அக்ரஹாரம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குழந்தை ராவிணி நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது தினேஷ் மற்றும் சாந்தா ஆகியோர் சிமெண்டு குழாயை கழற்றி நகர்த்தி கொண்டிருந்தனர்.
பலி
அப்போது குழந்தை ராவிணி சிமெண்டு குழாயின் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. அந்தசமயம் சிமெண்டு குழாயில் குழந்தையின் தலை மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ராவிணி நேற்று முன்தினம் இறந்தது. இதுகுறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.