ஓசூரில் பள்ளி வளாகத்தில் விஷவாயு பரவியதா? - மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு
மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் இன்று மதியம் திடீரென ஒரு சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் ஓசூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்த மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் அதே போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பிற மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பள்ளியில் உள்ள பிற மாணவர்கள் அருகில் உள்ள ஆண்கள் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஓ.ஆர்.எஸ். எனப்படும் எலக்ட்ரோலைட் பானங்கள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி வளாகத்திற்கு முன் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு ஓசூர் மாநகராட்சி ஆணையர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து விஷவாயு கசிந்ததா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது, அவ்வாறு எந்த கசிவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
எனவே வேறு ஏதேனும் வழிகளில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா, அல்லது மாணவர்கள் சாப்பிட்ட உணவின் காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.