பொதட்டூர்பேட்டையில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
பொதட்டூர்பேட்டையில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சமீபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை நேரங்களில் மகாபாரதத்தை நாடகமாக சில கலைஞர்கள் நடித்துக் காட்டுவது வழக்கம். அதன்படி இந்த விழா தொடங்கிய நாள் முதல் மகாபாரதத்தை நாடக கலைஞர்கள் நடித்துக் காட்டினார்கள். நேற்றைய தினம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் துரியோதனனை வதம் செய்வது போன்ற காட்சி நடித்துக் காட்டப்பட்டது. அப்போது ராட்சத உருவம் கொண்ட துரியோதனனின் உருவத்தை மண்ணால் பொம்மையாக தயார் செய்து இருந்தனர். அதன் மீது துரியோதனனை வதம் செய்பவர் நின்று கொண்டு தன்னுடைய கஜ ஆயுதத்தால் அந்த உருவத்தை அடித்து அவரை வதம் செய்வது போல் தத்துரூபமாக நடித்துக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் பொதட்டூர்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பக்தர்கள் பலர் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.