ரூ.1½ கோடியில் தார்சாலை
அஞ்சுகுளிபட்டி -சிறுமலை இடையே ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடந்தது.
சாணார்பட்டி அருகேயுள்ள அஞ்சுகுளிபட்டியில் வனப்பொறியியல் துறை மூலம் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் அஞ்சுகுளிபட்டி முதல் சிறுமலை கீழ்வெள்ளையம்மாள் கோவில் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை, ரூ.35 லட்சத்தில் அஞ்சுகுளிபட்டி துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மற்றும் ரூ.10 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதற்கு மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், அஞ்சுகுளிபட்டியிலிருந்து சிறுமலைக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் இ.பெரியசாமி பரிந்துரைபடி அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் கீழ்வெள்ளையம்மாள் கோவில் முதல் சிறுமலை தாளக்கடை வரை உள்ள 7 கி.மீட்டர் இணைப்பு சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், தி.மு.க. மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மோகன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர்பாட்ஷா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணை தலைவர் ராமதாஸ், அஞ்சுகுளிபட்டி ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி தலைவர் தேவிராஜா சீனிவாசன், துணை தலைவர் ரேணுகாதேவி, ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.