இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப கொடுக்க வந்த தொழிலாளி குடும்பத்தினருடன் தர்ணா
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப கொடுக்க வந்த தொழிலாளி குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் தான் பிச்சை எடுத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்ககோரி அந்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
ஊதியம் வழங்க வேண்டும்
கூட்டத்தில் முன்னாள் பன்நோக்கு மருத்துவ பணியாளர்கள், இதர பணியாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் கோவிட் வார்டுகளில் பணியாற்ற டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள், பன்னோக்கு பணியாளர்கள் என பலர் நேரடியாகவும், வெளிமுகமை அடிப்படையிலும் தமிழக அரசு நியமனம் செய்தது. அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நாங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம். அதற்காக முதலில் வெளிமுகமை மூலம் ஊதியம் வழங்கிய வந்த நிலையில் பிறகு தேசிய சுகாதார திட்டம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் இல்லை. அதனால் பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களாகிய நாங்கள் பணிபுரிந்து வந்தோம். திடீரென எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்ததோடு, 2 மாத ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மல்யுத்த மைதானம் வேண்டும்
கரூர் மாவட்ட மல்யுத்த வீரர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள மல்யுத்த வீரர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறோம்.
ஆனால் எங்களுக்கு பயிற்சி பெற உரிய மைதானம் இல்லை. இதனால் மேம்பட்ட போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே மல்யுத்தத்திற்குரிய மைதானம் அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மீன் விற்பனை வளாகம் அமைக்கக்கூடாது
சுங்ககேட் பகுதிக்குட்பட்ட காவிரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் நாங்கள் பல ஆண்டுகள் வசித்து வருகிறோம். இந்தநிலையில் எங்கள் பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியை மீன் விற்பனை வளாகமாக மாற்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கு மீன் விற்பனை வளாகம் அமைத்தால் அப்பகுதியில் கடும் துர்நாற்்றம் ஏற்படும். எனவே இங்கு மீன் விற்பனை வளாகம் அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நகர் முதல் தெருவிற்கு சரியான சாக்கடை வடிகால் வசதி இல்லை எனவே அந்த வசதியும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தரமான உணவு வழங்க நடவடிக்கை
தாந்தோணிமலையைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் சந்திரசேகர் கொடுத்த மனுவில், நான் கடந்த மாதம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போது அங்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இரும்பு துண்டு இருந்தது. எனவே மருத்துவமனையின் சமையல் அறையை ஆய்வு செய்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தர்ணா போராட்டம்
தாந்தோணிமலை தெற்கு தெருவை சேர்ந்த தொழிலாளி பெருமாள் தனது குடும்பத்தினருடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெருமாளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெருமாள் கூறுகையில், கரூர் அருகே மணவாடி கிராமத்தில் உள்ள கல்லுமடைக்காலனியில் எனது தாயாருக்கு இலவச வீட்டு மனை பட்டா கடந்த 2008-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. பண வசதி இல்லாததால் வீடு கட்ட முடியாமல் இருந்து வந்தோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக அங்கு சென்று பார்த்தபோது, எங்கள் இடத்தில் வேறு ஒரு தனிநபர் அவருக்கு சொந்தமான இடம் எனக்கூறி கம்பி வேலி அமைத்து வீடு கட்டி வருகிறார். இதுகுறித்து கேட்டால் தகாதவார்த்தையால் திட்டி அனுப்பினார். அதனால் எனது தாயாருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ெகாடுக்க வந்தோம் என்றார்.
இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்த அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.