ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
திருப்பத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் தாலுகா அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கல்வி மாவட்ட தலைவர் ஆர்.சங்கர் தலைமை தாங்கினார்.
கல்வி மாவட்ட செயலாளர் அறிவழகன், எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் அன்னையா, மாநில துணைத்தலைவர் அலோசியஸ் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்த மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு பறித்துள்ளது.
மீண்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர் பரமசிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், வட்டார தலைவர் எம்.ரமேஷ், எஸ்.சிவக்குமார், செயலாளர்கள் ஜி.திருப்பதி, பி.பரசுராமன் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.