சம்பள உயர்வு கேட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூசி
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்கள்
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டவுடன் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் 27 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
மேற்பார்வையாளர், மேலாளர், காவலாளி, வார்டு பாய், ஹவுஸ் கீப்பிங் என 27 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர்.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும். 15 நாளைக்கு ஒருமுறை விடுமுறை அளிப்பதை சுழற்சி முறையில் மாற்றி அமைக்க வேண்டும்
. மேலும் பணிச்சுமை காரணமாக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை நுழைவுவாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.8,500 பெற்ற ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் உயர்வு தரப்பட்டது.
ஆனால் ஒரே மாதத்திலேயே மீண்டும் ரூ.8,500 சம்பளம் குறைத்து விட்டனர். மேலும் ஒரு மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 2 நாட்களாக குறைத்துவிட்டனர்.
எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட பணிபலன்களை வழங்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.