கல்பாக்கம் அணுசக்தி மத்திய பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா போராட்டம்
காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்பாக்கம் அணுவாற்றல் ஊழியர் குடியிருப்பில் அணு சக்தி மத்திய பள்ளி இயங்குகிறது. அதுபோல் அணுபுரம் ஊழியர் குடியிருப்பில் அணு சக்தி மத்திய பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கற்ப்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் அணுபுரம் மத்திய பள்ளியில் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பணி ஓய்வு பெறுதல் காரணங்களால் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இந்த பள்ளியில் 23 ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களை பள்ளி நிர்வாகம் நிரப்பாததால் மாணவர்களின் கல்வி கற்கும் நிலைமை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென பள்ளியை முற்றுகையிட்டு உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பக்கோரி தரையில் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக பள்ளி முதல்வர் பிகாஸ் காம்ப்லே மற்றும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய முதன்மை நிர்வாக அதிகாரி சேதுராமன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெற்றோர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதில் காலியாகவுள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஜூலை மாதம் இறுதிக்குள் நிரப்ப வேண்டும், மாணவர்கள் நலன் கருதி இந்த பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்காக தற்காலிகமாக பணியமர்த்த வேண்டும்.
1-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். ஷிப்ட் முறை வகுப்புகளை கைவிட வேண்டும், இந்திய அளவில் இயங்கும் அணுசக்தி மத்திய பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை பணிமாறுதல் பெற்று இங்கே பணியமர்த்த வேண்டும், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடங்குதல் என்று பெற்றோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவினை நிர்வாக அதிகாரியிடம் வழங்கினர்.
மனுவை பெற்று கொண்ட முதன்மை நிர்வாக அதிகாரி சேதுராமன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து மும்பையில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியின் தலைமையகம் தான் முடிவு செய்யும் என்றும், மும்பை தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கைகள் குறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்திய அளவில் அணுசக்தி மத்திய பள்ளிகளில் காலியாகவுள்ள 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
விரைவில் அணுபுரம் பள்ளியிலும் கலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என பள்ளி நிர்வாகம் உறுதி அளித்தனர். அதன் பேரில் 2 மணி நேரமாக பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.