மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்


மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

தென்காசி

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கவுன்சிலர் கனிமொழி தனது வார்டுக்கு தலைவி நிதி ஒதுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உரிய பதில் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கனிமொழி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்பிறகு தலைவி தமிழ்ச்செல்வி கலெக்டரை சந்தித்து தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்று ஒரு மனுவை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதன்பிறகும் கனிமொழி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வெகு நேரம் ஆனதால் போலீசார் அவரை அந்த அரங்கில் இருந்து வெளியே வரச்சொல்லி கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறினர். கலெக்டரின் அறை அருகே அவர் வந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக போலீசார் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story