விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு டிசம்பர் 3 இயக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நல சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், செயலாளர் அமரேசன், பொருளாளர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அட்டை முறையாக வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும், முழு ஊதியம் 281 ரூபாய் வழங்க வேண்டும், பணிதள பொறுப்பாளர் வேலைக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கிராமப்புற பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடு மற்றும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.