தருமபுரி மாவட்ட கடையடைப்பு போராட்டம் வெற்றி; அனைத்து வணிகர்களுக்கும் நன்றி - அன்புமணி ராமதாஸ்


தருமபுரி மாவட்ட கடையடைப்பு போராட்டம் வெற்றி; அனைத்து வணிகர்களுக்கும் நன்றி - அன்புமணி ராமதாஸ்
x

கோப்புப்படம்

தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அரை நாள் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. தருமபுரி நகரத்தில் தொடங்கி, குக்கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவோ, தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கோ எந்த நடவடிக்கையையும் எடுக்காத தி.மு.க. அரசு, மக்கள் நலன் கருதி பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருந்த இந்தப் போராட்டத்தை முறியடிக்க அனைத்து வழிகளிலும் முயன்றது. மக்கள் நலனுக்காக இயங்காத அரசு எந்திரத்தை பா.ம.க. அறிவித்த இந்த போராட்டத்தை முறியடிப்பதற்காக தி.மு.க அரசு முழுமையாக முடுக்கி விட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் பலவழிகளில் அச்சுறுத்தப்பட்டனர்.

ஆனால், அனைத்தையும் மீறி அரைநாள் கடையடைப்பு போராட்டம் முழுமையான வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக அனைத்து வணிகர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காக கண்ணுறங்காமல் களப்பணியாற்றிய தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் இணை, சார்பு அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து அடக்குமுறைகளையும் மீறி தருமபுரி மாவட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றதன் காரணம், தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட மக்கள் விரும்புகிறார்கள் என்பது தான். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடாமல் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்; உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story