தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்


தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

இலுப்பூரில் தரம் தூக்கி பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு ஆராதனைகளும், காலை மாலை இரு வேளையும் அம்பாள் வீதி உலாவும் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை பால்குட ஊர்வலம், அலகு குத்துதல், மாவிளக்கு ஏற்றுதல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் திரளாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து பிடாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.


Next Story