டி.ஜி.பி. அலுவலகத்தில் வீரவணக்க நாள் - கடந்த ஆண்டு உயிரிழந்த 188 போலீசாருக்கு அஞ்சலி
சென்னையில் உள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு உயிரிழந்த 188 போலீசாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த 21.10.1959 அன்று மறைமுக தாக்குதல் நடத்தியது. இதில் நம் நாட்டின் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழக்கும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி அன்று போலீஸ் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வீரவணக்க நாளையொட்டி நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின்போது வீர மரணமடைந்த போலீஸ்துறை மற்றும் துணை ராணுவ படையை சேர்ந்த 188 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மரணமடைந்த போலீசார், துணை ராணுவ படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடையாளமாக டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், இறந்த போலீசாரை பற்றி நினைவுக்கூர்ந்து பேசினார்.
இதைத்தொடர்ந்து காவலர் நினைவு சின்னத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வீரவணக்க நாள் நிகழ்வில் முப்படையை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இறந்த போலீசாருக்கு மவுன அஞ்சலியும், துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது.
வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், 'மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காக தம் உயிரையும் பணயம் வைத்து நம்மை பாதுகாக்கும் கடமை உணர்வுமிக்க போலீஸ்துறையினரின் தியாகங்களுக்கு காவலர் வீரவணக்க நாளில் எனது வீரவணக்கங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
ஆவடியில் உள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று காலை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பணியின்போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.