போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆலோசனை


போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆலோசனை
x

போதைப்பொருள் ஒழிப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள டி.ஜி.பி. சைலேந்திர பாபு வலியுறுத்தினார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாநிலம் முழுவதும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர்.

மேலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் மூலம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்று கூட்டத்தில் சைலேந்திரபாபு நம்பிக்கை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளன.


Next Story