2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று வழங்கப்படுகிறது.
உலக மக்கள்தொகையில் 24 சதவீத பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடற்புழு தொற்றினால் இரும்புச்சத்து இழப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, விட்டமின் ஏ சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 21-ந்தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. இந்த ஆண்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இன்றும், விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ந்தேதியும் நடைபெறும் முகாம்களில் அல்பென்சோல் மாத்திரை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். அரியலூர் மாவட்டதில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 741 பள்ளிகள் மற்றும் 774 அங்கன்வாடி மையங்கள் 15 கல்லூரிகள், 7 தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் 1 முதல் 19 வயது வரை உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 168 பேருக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 54 ஆயிரத்து 465 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் 633 பேருக்கும் மாத்திரைகள் வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலம் இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.