ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்:காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடுசாமி சிலைகளை சுத்தம் செய்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்
சேலம்
சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். மேலும் சாமி சிலைகளை சுத்தம் செய்து ஊர்வலமாக தங்கள் ஊர்களுக்கு எடுத்து சென்றனர்.
ஆடிப்பெருக்கு விழா
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரியானது தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை காவிரி, கொள்ளிட கரைகளில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய நோக்கமே அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து உருவான காவிரி ஆற்றை பெண் தெய்வமாக கருதி வழிபட்டால், பெண்களின் தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம். மேலும் காவிரி தாயை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதோடு விவசாயத்தை செழிக்க செய்யும் காவிரித்தாய்க்கு ஆடிப்பெருக்கின்போது நன்றி தெரிவித்து வழிபடுவது வழக்கம்.
இதன்படி ஆடிப்பெருக்கு நாளான நேற்று அதிகாலை முதலே சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக மேட்டூர், கல்வடங்கம், பூலாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் பக்தர்கள் குவிந்து புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
கல்வடங்கம் காவிரி ஆறு
அந்த வகையில், சேலம், கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, ஜலகண்டாபுரம் தேவூர், மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பொதுமக்கள் அதிகாலை முதலே பல்வேறு வாகனங்களில் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு புனித நீராட குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில் திருவிழாக்களுக்கு தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர்.
மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த குலதெய்வ கோவிலில் உள்ள சாமி சிலைகள், ஈட்டி, வேல், கத்தி உள்ளிட்ட வழிபாட்டு பொருட்களை காவிரி ஆற்றில் கழுவி கரையில் வைத்து பூஜை செய்தனர்.
புதுமண தம்பதிகள் புனித நீராடி தாலிக்கயிறு மாற்றிக்கொண்டனர். மேலும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் திருமண மாலை மற்றும் பூக்களை தூவி விட்டனர்.
மேலும் திரளான மக்கள் தலையில் அருகம்புல் மற்றும் செல்லாத காசு வைத்து தண்ணீரில் மூழ்கி விட்டு விட்டு காவிரி ஆற்றங்கரையில் உள்ள கூழாங்கற்கள், சிலைகளை எடுத்து வைத்து அதற்கு பூக்கள் குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வழிபாடு செய்தனர்.
தங்க கவசத்தில் அம்மன்
மேலும் கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, அங்காளம்மன் தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் மாலை வரை வழிபாடு செய்தனர்.
கல்வடங்கத்திற்கு பக்தர்கள் அதிகளவில் வாகனங்களில் வந்திருந்ததால், எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் கொட்டாயூரில் இருந்து கல்வடங்கம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்களின் கூட்டமும் அலைமோதியது. இதையொட்டி தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம், ஈரோடு, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காலையில் இருந்து மேட்டூர் வந்த வண்ணம் இருந்தார்கள். இவர்கள் மேட்டூர் காவிரி பாலம், மேட்டூர் அனல் மின் நிலையம் புது பாலம், அணைக்கட்டு முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளை காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள். இதைத்தொடர்ந்து அணைக்கட்டு கோவிலுக்கு சென்று ஆடு, கோழி ஆகியவற்ைற பலியிட்டு பொங்கல் வைத்து முனியப்பனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பின்னர் அவர்கள் தாங்கள் சமைத்த உணவை பூங்காவிற்கு எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
மேட்டூர் காவிரி பாலம் அருகே நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஏதுவாக பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தற்காலிக உடைமாற்றும் வரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை அடுத்து மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் கொளத்தூர், மேச்சேரி, கருமலைக்கூடல் போலீசார் காவிரி ஆற்றங்கரை பூங்கா, அணைக்கட்டு முனியப்பன் கோவில் உள்பட முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் யாராவது தவறி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டால், அவர்களை உடனடியாக மீட்பதற்கு மேட்டூர் தீயணைப்பு நிலையத்தால் ரப்பர் பரிசல் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசாரும், தீயணைப்பு படையினரும், காவிரி ஆற்றில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து மாற்றம்
மேட்டூர் பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக மேட்டூரில் இருந்து கொளத்தூர் செல்லும் பஸ்கள் பொன் நகர், குள்ளவீரம்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டது. இதேபோன்று வெளியூரில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. அந்த பள்ளியை தாண்டி செல்ல போலீசார் அனுமதிக்கவில்ைல. இந்த நடவடிக்கையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் இன்றி சுற்றுலா பயணிகள் அனைவரும் சென்று வர முடிந்தது.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமி சிலைகள், சாமியின் ஈட்டி, கத்தி போன்ற ஆயுதங்கள் மேளதாளங்களுடன் மேட்டூர் காவிரி ஆற்றுக்கு எடுத்து வரப்பட்டு ஆற்றில் தூய்மைப்படுத்தி மீண்டும் கோவிலுக்கு பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றதை காண முடிந்தது.