பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி அதிகாலையில் கோபூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது.
பின்னர் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பெருமாள் நேற்று குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.