திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நேற்று குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நேற்று குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மாலையில் சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் குவிந்தனர்
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், நேற்று விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோவிலில் குவிந்தனர்.
அவர்கள் அங்குள்ள கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.