பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடைசி சனிக்கிழமை
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் வைணவ கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதில் சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ நாளாகும். இந்தஆண்டில் புரட்டாசி மாதத்தில் கடைசி சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் ேநற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புதுக்கோட்டையில் விட்டோபா பெருமாள் கோவில், கீழ 3-ம் வீதியில் வரதராஜ பெருமாள் கோவில், திருக்கோகர்ணம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மகாளய அமாவாசை
இந்த நிலையில் மகாளய அமாவாசை தினம் நேற்று சனிக்கிழமையில் அமைந்தது கூடுதல் சிறப்பானது. பெருமாள் கோவில்களை போல ஆஞ்சநேயர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பரமந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமயம்
திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதே போல கீரமங்கலம் வேம்பங்குடி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணமேல்குடி
மணமேல்குடி அடுத்த பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.