கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் அருகில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. நடுத்திட்டு கோவிலுக்கு எதிர்புறம் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயத்தை சுற்றி செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை 6 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.