விடுமுறை நாளையொட்டி அழகர்கோவிலில் அலைமோதிய பக்தர்கள்- நெய் விளக்கேற்றி சாமி தரிசனம்


விடுமுறை நாளையொட்டி அழகர்கோவிலில் அலைமோதிய பக்தர்கள்- நெய் விளக்கேற்றி சாமி தரிசனம்
x

விடுமுறை நாளையொட்டி அழகர்கோவிலில் அலைமோதிய பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

அழகர்கோவில்,

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பதினெட்டாம்படி கருப்பணசாமி திருநிலைக் கதவுகளுக்கு நிலை உயர மாலைகளும், சந்தனமும், எலுமிச்சம் பழம், பரிவட்டங்கள், பக்தர்களால் சாத்தப்பட்டது. மேலும் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.அழகர் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை ராக்காயி, அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரம் முதல் சோலைமலை முருகன் கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவில் கோட்டை சுவர் வெளி வளாகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்து நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story