தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கொடைக்கானல் குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில், குறிஞ்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்கியது. இதையொட்டி குறிஞ்சி மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அம்மனின் மின் அலங்கார தேர்பவனி நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி மேள தாளம் முழங்க தீச்சட்டி ஏந்தியடி டிப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் புறப்பட்டனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலை, பஸ்நிலையம், மூஞ்சிக்கல், அண்ணாநகர் வழியாக சென்று ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், அக்னி சட்டி ஏந்தியபடி பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. மேலும் வண்ண மலர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில், குறிஞ்சி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சிவன், அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து பக்தர்கள் நடனம் ஆடிய காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.