நவத்திருப்பதி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமைையயொட்டி நவத்திருப்பதி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற 9 நவத்திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளது. பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதன்படி நேற்று நவத்திருப்பதி கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நவத்திருப்பதி 7-வது ஸ்தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் மற்றும் 3- வது ஸ்தலமான திருப்புளியங்குடி காய்சினி வேந்தர் பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து, சிற்பு வழிபாடு நடத்தினர்.
விளக்கு ஏற்றி வழிபாடு
இதேபோல் நவத்திருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான், நத்தம் விஜயாசனர் பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய நவத்திருப்பதி கோவில்களில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பெருமாளுக்கு தீபாராதனைகளும் நடைபெற்று துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.