பண்டரிநாதன் கோவிலில் கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டு வணங்கி பக்தர்கள்
கரூர் பண்டரிநாதன் கோவிலில் கருவறைக்குள் சென்று சுவாமியை தொட்டு வணங்கி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பண்டரிநாதன் சுவாமி
கரூர் ஜவகர்பஜார் அருகே பழமை வாய்ந்த பண்டரிநாதன் சுவாமி பஜனை மடம் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூலோக சொர்க்க நாள் என அழைக்கப்படும் ஆஷாட ஏகாதசி நாளில் மூலவரை தொட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு 100-ம் ஆண்டு ஆஷாட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை துக்காராம் கொடி புறப்பாடு நடைபெற்றது.
கருவறைக்குள் சென்ற பக்தர்கள்
நேற்று காலை 6 மணியளவில் ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமிக்கு பால், தயிர் பஞ்சாமிர்தம் தேன், நெய் இளநீர், எலுமிச்சை பழம் சாறு, திருமஞ்சல், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வெள்ளி கிரீடம் சாத்தி அலங்கரித்தனர். சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு நெய்வேத்தியம் சாத்தப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமியை ஆலய மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் திரளான பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கருவறையில் சென்று ரகுமாய் சமேத பண்டரிநாதன் சுவாமியை தொட்டு பயபக்தியுடன் வழிபட்டு சென்றனர்.
தீர்த்தவாரி
மாலை 4 மணி முதல் 6 மணி வரை நாம சங்கீர்த்தனமும், மாலை 6.30 மணியளவில் சுவாமி புறப்பாடும், நகர சங்கீர்த்தனமும் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் காவிரி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணியளவில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விழா அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.