திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
கோடை விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் குவிந்த பக்தர்கள்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
சாமி தரிசனம்
அதிகாலை முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர். பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.