திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தமிழ் புத்தாண்டைெயாட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலையில் சுவாமி அஸ்திரதேவர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை விசு கனி
தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் விளக்கு பூஜை நடந்தது. கோவில் உள்பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கண்ணாடி முன்பாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள், இனிப்புகளுடன் விளக்கு தீபம் ஏற்றி சித்திரை விசு கனி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிலர் நோட்டு புத்தகங்களுடன் வந்து பூஜை செய்து புதுக்கணக்கு தொடங்கினர்.
சிறப்பு அன்னதானம்
கோவில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மதியம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.