அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x

ஆடி 3-ம் வெள்ளியையொட்டி படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

ஆடி 3-ம் வெள்ளியையொட்டி படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

ஆடிவெள்ளி விழா

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் நடந்தது. 3-ம் வெள்ளியான நேற்று படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் படவேடு ஆற்றுப் பாலம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. கோவில் செல்லும் சாலையில் இருபுறமும் நடைபாதைக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ததால் போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

ஏராளமான பெண்கள் வேப்பிலை சேலை அணிந்து கோவிலை வலம் வந்தும், அம்மன், பரசுராமன் சிலைகளை தலையில் சுமந்தவாறும் கோவிலை வலம் வந்தனர்.

காமதேனு வாகனம்

மாலையில் நாதஸ்வர கச்சேரியும், இரவில் காமதேனு வாகனத்தில் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 2 ஆண்டாக தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடு நீங்கியதால் பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் மாட்டு வண்டி, டிராக்டர், உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கோவில் செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

ஆரணி-போளூர்

ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

இதே போல் காந்தி ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில், கொசப்பாளையம் வினை தீர்க்கும் முத்துமாரியம்மன் கோவில், காவலர் குடியிருப்பு பகுதி கோட்டை வேம்புலி அம்மன் கோவில், ராஜாஜி தெருவில் உள்ள செல்லியம்மன் கோவில், பாட்ஷா தெருவில் உள்ள கருமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி 3-ம் வெள்ளி விழா நடைபெற்றது.

போளூரை அடுத்த வசூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதை தொடந்து அம்மனை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு வழிபாடு நடந்தது.

போளூர் காளி அம்மன், போலாட்சி அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story