மாசி மாத கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடிகிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் நேற்று மாசி கிருத்திகை மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்கள்.
5 மணி நேரம் காத்திருப்பு
இதனால், பொதுவழியில், பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
மாசி கிருத்திகை விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளி சூரிய பிரபையில் முருகபெருமான் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைப்பாதையில் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.