அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

வேலூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.]

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.

பக்தர்கள் வருகையையொட்டி கோவில்களில் பல்வேறு முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முக்கிய கோவில்களில் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தங்க கவசமும் அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

பகவதி அம்மன் கோவில்

இதேபோல, வேலூர் பகவதிமலை வேப்பங்காடு பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சசத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில், சாலைகெங்கை அம்மன் கோவில், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள மகா விஷ்ணுதுர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

அனைத்து கோவில்களிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

====


Next Story