பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 26 Jun 2022 4:24 PM GMT (Updated: 26 Jun 2022 4:31 PM GMT)

பழனி முருகன் கோவிலில் வாரவிடுமுறையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் தற்போது ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல ரெயில்நிலையத்தில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் இருந்தது. இதற்கிடையே பழனிக்கு வந்த பக்தர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்நிலையத்தில் மாலையில் கடும் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.


Next Story