சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!


சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!
x

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.

காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.

மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story