மாநகராட்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள்- மேயர் இந்திராணி பேச்சு
மதுரை மாநகராட்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக மேயர் இந்திராணி பேசினார்.
மதுரை மாநகராட்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக மேயர் இந்திராணி பேசினார்.
சிறந்த நாடு
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படையாக திகழ்கிறது. ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு எத்தனை உயிர்களை இழந்திருப்போம், எத்தனை வளங்களை வாரி கொடுத்திருப்போம். நம்மில் பல்வேறு மொழி, இனம், பண்பாடு, கலாசாரம், உணவு, உடை இருந்தாலும் உணர்வில் நாம் அனைவரும் இந்தியர்களாகவும் பல்வேறுபட்ட கலாசாரங்களை பேணிக்காக்கும் மனிதர்களாக வாழ்கின்றோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒற்றை கோட்பாட்டில் மதசார்பற்ற ஜனநாயக மரபுகளை கட்டிக் காக்கும் மிக சிறந்த நாடாகும்.
நமது நாடு தற்போது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை பெற்று உலக நாடுகளுக்கு எல்லாம் எடுத்துகாட்டாக திகழ்கிறது. இந்தியாவின் பன்முக தன்மையையும், ஒருமைப்பாட்டையும், நாம் கடைப்பிடிக்கும் கூட்டாட்சி தத்துவம் இருக்கும் வரை எவராலும் நம்மை சிதைத்து விட முடியாது. இந்நேரத்தில் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய கருணாநிதியை போற்றுவோம். விடுதலைக்கு பாடுபட்ட நம் தேச தியாகிகளை போற்றுவோம், நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றி கடன் அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை நாம் பேணி காத்திட வேண்டும்.
வளர்ச்சி பணிகள்
மதுரை மாநகராட்சியில் சுகாதாரம், பொறியியல், கல்வி ஆகிய பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இந்த காலகட்டம்தான் மாநகராட்சியில் அதிக கட்டமைப்பை உருவாக்கும் காலமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர்ந்து மேயர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், துணை மேயர் நாகராஜன், துணை கமிஷனர்கள் சரவணன், நிதி, மண்டல தலைவர்கள் பாண்டிச்செல்வி, வாசுகி, சுவிதா, நகர் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.