குற்றாலத்தில் ரூ.11 கோடியில் வளர்ச்சி பணிகள்
குற்றாலத்தில் ரூ.11 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
குற்றாலத்தில் ரூ.11 கோடி செலவில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பராமரிப்பு பணி
குற்றாலம் அருவி பகுதிகளில் ரூ.11 கோடியில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக மெயின் அருவி பகுதியில் பணிகள் மேற்கொள்வதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த பணியை கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் அருவி பகுதிகளை மேம்படுத்த 2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பூங்கா மேம்பாடு
அதன்படி குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது முதற்கட்டமாக மெயின் அருவி பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தின் ஆலோசனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல்படுத்தப்படும். தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக் குமார், தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திரகுமார், குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலர் ராஜகணபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.