வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா உத்தரவிட்டார்.

வேலூர்

ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா பேசியதாவது:-

விரைந்து முடிக்க வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உழவர் நலத்துறை சார்பில் 12,717 பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3,815 பணிகளும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 16,160 பணிகளில் 5,143 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள், பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் ஆகிய பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

வருவாய்த் துறையில் இதுநாள் வரை பட்டா மாறுதல் தொடர்பாக வரும் மனுக்களை ஆய்வு செய்து, எவ்வித சுணக்கமும் இன்றி பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.

காலை உணவு திட்டம்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை உறுதிசெய்து தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 134 பள்ளிகளில் 710 முகாம்கள் நடத்தப்பட்டு 844 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முதல்- அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் 9,064 பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) அப்துல்முனிர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story