ரூ.76 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு

கடையநல்லூர் யூனியன் பகுதியில் ரூ.76 லட்சத்தில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் யூனியன் பகுதியில் ரூ.76 லட்சத்தில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
சமத்துவபுரம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியன் பொய்கை, வேலாயுதபுரம், நயினாரகரம், குத்துக்கல்வலசை ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
பொய்கை ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், வேலாயுதபுரத்தில் ரூ.9.36 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊருணி புனரமைப்பு பணிகள், நயினாரகரம் ஊராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தையும் அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் நல அரசு
பின்னர் அவர் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்தேன். குறிப்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், சமத்துவபுரங்களில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நல அரசாக இந்த அரசு இருந்து வருகிறது.
தமிழகத்தில் 238 சமத்துவபுரங்கள் உள்ளன. இவை அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, குறிப்பாக 2006-11 ல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது கொண்டு வரப்பட்ட சமத்துவபுரங்கள்தான்.
ஆதாரமின்றி...
அ.தி.மு.க. ஆட்சியில் இந்த சமத்துவபுரங்களில் சிறிய அளவிலான புனரமைப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 145 சமத்துவபுரங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள சமத்துவபுரங்களும் விரைவில் புனரமைக்கப்படும்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து அரசு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அளித்துள்ளார். அமைச்சராக, முதல்வராக இருந்தவர் போகிற போக்கில் குற்றம் சாட்டுவது சரியல்ல. ஆதாரமின்றி குற்றம் சாட்டக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், நயினாரகரம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா என்ற முத்து, பொய்கை பஞ்சாயத்து தலைவர் ஜெயக்குமார், ஆணையாளர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, பொறியாளர்கள் சுப்பிரமணியன், ஜான், கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலர்கள் முகைதீன் கனி, முருகன், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.