வளர்ச்சி திட்டப்பணிகள்
வளர்ச்சி திட்டப்பணிகள்
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிட பழுது நீக்கம் செய்யும் பணி மற்றும் சமையல் கூடத்தில் ரூ.33 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிட பழுது நீக்கம் செய்யும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சன்னமங்கலம் முதல் தெருவில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணியையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், திருமருகல் ஊராட்சியில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகளையும், சந்தைப்பேட்டையில் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவு நீர் பாதையை தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்
பண்டாரவாடை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகளையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளையும், திருக்கண்ணபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
முன்னதாக பனங்குடி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, திருமருகல் ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின்பால் நிறுவனத்தின் புதிய பால் குளிர்விப்பான் நிலையத்தினை கலெக்டர் திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ., வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.