வளர்ச்சி திட்ட பணிகள்
தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள்
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சைமாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நல வாரியம் சார்பில் ஆட்டோ ஓட்டுனா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பாபநாசம் தாலுகா மாரியம்மன் கோவில் ஊராட்சி சமுத்திரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்தும், அம்மாப்பேட்டை ஊராட்சியில் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி திறன் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
மேலும் பூண்டியில் பொது வினியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பூண்டி அரசு ஆரம்ப சுகாகார நிலையத்தில் கரப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், சுகாதார நிலையத்தில் மருந்து மற்றும் தடுப்பூசிகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சாலியமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், சாலியமங்கலம் ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்தும் ஆய்வு செய்தார்.
கல்வி தரம்
சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடம் புனரமைக்கும் பணி, மாணவ மாணவிகளின் கல்வி தரம் குறித்தும், சாலியமங்கலம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் மேற்கொள்ளப்பட்டு வரும், புனரமைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது அமானுல்லா, கூத்தரசன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கதிசேரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.