திருவள்ளூரில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


திருவள்ளூரில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்

கண்காணிப்பு குழு கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 35 திட்டங்கள் குறித்து ஆராய்ந்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை துறை சார்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டைகளை வழங்குவது மற்றும் மண்வள அட்டையின்படி உர பரிந்துரை செய்து ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல் நோக்கமாக கொண்ட தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

காலை உணவு திட்டம்

சமூக நலத்துறை சார்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

ஜல் ஜீவன் திட்டம்

வருவாய்த்துறை சார்பாக முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல் நோக்கமாக கொண்ட ஜல் ஜீவன் திட்டம், 60 விழுக்காடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கும் 40 விழுக்காடு இதர வகுப்பினருக்கும் குடியிருப்புகளை உருவாக்கி தரும் நோக்கமாக கொண்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்

பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6 முதல் 18 வயது வரம்புக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி உறுதி செய்தல் நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம். விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குதல் நோக்கமாக கொண்ட தீன தயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜனா திட்டம், நகராட்சி நிர்வாகம் சார்பாக செயல்படுத்தும் நகர்ப்புற தூய்மை பாரத இயக்கம் அம்ரித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து விவாதிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ், சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சசிகலா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story