2 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது


2 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
x

விருத்தாசலத்தில் 2 சாராய வியாபாரிகள் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.

கடலூர்

விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று பனையாந்தூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வயலில் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வடபாதி பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கைதான ரவி மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 4 சாராய வழக்குகள், சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு சாராய வழக்கும், கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. இதேபோல் மணிவேல் மீது விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 4 சாராய வழக்குகள், சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள், கீழ்குப்பம் மற்றும் களத்தூர் போலீஸ் நிலையத்தில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் உள்ளன.

தடுப்புக்காவல் சட்டம்

இதனால் ரவி, மணிவேல் ஆகியோரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், அவர்கள் 2 பேரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரிகள் ரவி, மணிவேல் ஆகியோரிடம், அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story