வாய்க்காலை ஆக்கிரமித்து சாகுபடி செய்த கரும்பு பயிர்கள் அழிப்பு
ரிஷிவந்தியம் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து சாகுபடி செய்த கரும்பு பயிர்கள் அழிப்பு
ரிஷிவந்தியம்
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து வலதுபுற வாய்க்கால் மூலம் சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதில் கடம்பூர் ஏரிக்கு நீர் வரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கிளை வாய்க்காலை விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து கரும்பு சாகுபடி செய்திருந்தனர். இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடை பட்டதால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சங்கராபுரம் பொதுப்பணித்துறை(நீர்வளம்) உதவி பொறியாளர் முருகேசன் மேற்பார்வையில் பாசன ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 350 மீட்டர் தூரத்துக்கு வாய்க்காலை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிரை அழித்தனர். அப்போது அரியலுார் வருவாய் ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க பகண்டைகூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.