இரட்டை இலை சின்னத்துடன் போடப்பட்ட கோலம் அழிப்பு:தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


இரட்டை இலை சின்னத்துடன் போடப்பட்ட கோலம் அழிப்பு:தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x

துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

ஈரோடு

ஈரோட்டில் இரட்டை இலை சின்னத்துடன் போடப்பட்ட கோலத்தை அழித்ததால், தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஈரோட்டுக்கு வந்து முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

தினமும் காலையிலும், மாலையிலும் அனைத்து வீதிகளிலும் கட்சி கொடிகள், தோரணங்கள் இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக பிரசாரத்துக்கு செல்லும் வீதிகளில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சி சின்னங்கள், கொடிகள் கோலமாக பல்வேறு இடங்களில் வரையப்பட்டு வருகிறது.

தி.மு.க. பணிமனை முன்பு..

இந்தநிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் செல்லும் வீதியில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பிரசாரம் செய்தார். இதையொட்டி அவரை வரவேற்பதற்காக அந்த வீதியில் முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வீதி முழுவதும் இரட்டை இலை சின்னம் கோலமாக வரையப்பட்டு இருந்தது. அங்குள்ள தி.மு.க. தேர்தல் பணிமனையின் முன்பு அந்த கோலம் போடப்பட்டு இருந்தது.

எனவே இரட்டை இலை சின்னம் கோலம் போட்டதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. தேர்தல் பணிமனை முன்பு இரட்டை இலை கோலம் வரையப்பட்டு இருந்ததால் சிலர் தண்ணீரை ஊற்றி கோலத்தை அழித்தனர். இதனால் அங்கிருந்த அ.தி.மு.க.வினர் ஆத்திரமடைந்து, தி.மு.க.வினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும், பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டார்கள். இதையடுத்து தி.மு.க.வினர் அவர்களது பணிமனையின் முன்பு நின்று கொண்டார்கள்.

அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். அ.தி.மு.க.வினரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அ.தி.மு.க.வினர் கூறுகையில், "நாங்கள் மட்டும் கோலம் போடுவதில்லை. தி.மு.க.வினரும் கோலம் போடுகிறார்கள். எங்களது கோலத்தை மட்டும் ஏன் அழிக்க வேண்டும். நாங்கள் மக்களை சந்தித்து ஓட்டு கேட்க அனுமதிக்க வேண்டும்", என்றனர். அதன்பிறகு அ.தி.மு.க.வினர் அந்த பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஈரோட்டில் சின்னத்துடன் கூடிய கோலம் போட்டது தொடர்பாக தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story