1,100 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு


1,100 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
x

வடகாடு அருகே 1,100 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர். சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

சிறையில் அடைப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் எத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 22 பேர் வரை பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சாராயம் மற்றும் சாராய ஊறல்களை கண்டு பிடித்து அவற்றை அழித்து வருவதோடு இது தொடர்பாக, சாராய வியாபாரிகள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரப்படுகிறது.

அதிரடி சோதனை

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வடகாடு அருகேயுள்ள கருக்காக்குறிச்சி தெற்கு தெரு பகுதியில் உள்ள தைல மரக்காட்டில் 5 பேரல்களில் போடப்பட்டு இருந்த 500 லிட்டர் சாராய ஊறல்களை கண்டு பிடித்து அவற்றை கீழே கொட்டி அழித்தனர். அதனைதொடர்ந்து, நேற்று ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் மற்றும் வடகாடு, ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கருக்காக்குறிச்சி தெற்கு தெரு தைல மரக்காட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

சாராய ஊறல் அழிப்பு

சோதனையில், அப்பகுதியில் 11 பேரல்களில் போடப்பட்டு இருந்த 1,100 லிட்டர் சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர். பின்னர் எஞ்சி இருந்த பேரல்களை தீயிட்டு கொளுத்தி அழித்தனர். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கருக்காக்குறிச்சி வடதெருவை சேர்ந்த செல்வம் (வயது 24) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

இப்பகுதிகளில் கொரோனா கால கட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த சமயத்தில், சாராய ஊறல்கள் மித மிஞ்சிய நிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் இப்பகுதிகளில் முகாமிட்டு அவற்றை அழித்தனர். மேலும் பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் கூட நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் சாராய ஊறல்கள் போடப்பட்டு வருவதாகவும், இச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story