மீன்பிடி தடைகாலம் முடிவடைந்தாலும் தஞ்சைக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்தது


மீன்பிடி தடைகாலம் முடிவடைந்தாலும் தஞ்சைக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்தது
x

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்தாலும் தஞ்சைக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்தது

தஞ்சாவூர்

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் தஞ்சைக்கு கடல்மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் விலை அதிகரித்து காணப்பட்டதால் விற்பனையும் சரிந்து காணப்பட்டது.

மீன்பிடி தடைகாலம்

தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காகவும், இறால் மீன் வளர்ச்சிக்காகவும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. கடல்வளத்தை பாதுகாக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றுமு் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது.

தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். குறிப்பாக நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது தவிர நண்டுகள் மேற்கு வங்காளத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

கடல்மீன்கள்

அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் முடிந்து நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதையடுத்து கடல்மீன்கள் விற்பனைக்கு வந்தன. தஞ்சையில் உள்ள மீன்மார்க்கெட்டுக்கும் கடல்மீன்கள் நேற்று விற்பனைக்கு வந்தன.

இது தவிர உள்நாட்டு மீன்கள் திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சைக்கு கொண்டுவரப்படும் மீன்கள் இங்கு ஏலமிடப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

வரத்து குறைந்தது

ஆனால் உள்நாட்டு மீன்கள் வழக்கம் போல விற்பனைக்கு வந்தது. கடல்மீன்கள் நேற்று முதல் நாளில் குறைந்த அளவே விற்பனைக்கு வந்தது. தஞ்சைக்கு 600 முதல் 1000 கிலோ அளவுக்குத்தான் மீன்கள் விற்பனைக்கு வந்தன. அதுவும் சங்கரா, கிழங்கா, ஷீலா போன்ற வகை மீன்கள் தான் விற்பனைக்கு வந்தன.

ஆனால் இந்த வகை மீன்கள் வழக்கத்தை விட விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது. மொத்த விற்பனை விலையாக நேற்று சங்கரா கிலோ ரூ.280-க்கும், கிழங்கா ரூ.120-க்கும், ஷீலா பெரியது ரூ.400-க்கும், சிறியது ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு ரூ.500-க்கும், இறால் ரூ.230 முதல் ரூ.280 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதில் கிழங்கா மீன் தவிர மற்ற வகை மீன்கள் அனைத்தும் ரூ.100 வரை விலை அதிகரித்து காணப்பட்டது.

விற்பனையும் குறைவு

உள்நாட்டு மீன்களான உயிர் கெண்டை மொத்த விற்பனை விலையில் கிலோ ரூ.80 முதல் ரூ.120-க்கும், விரால் ரூ.200 முதல் ரூ.400-க்கும், கொறவை ரூ.150-க்கும், ஜிலபி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் மொத்த விற்பனையில் இருந்து ரூ.20 முதல் ரூ.50 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து மீன் மொத்த வியாபாரி நேதாஜி கூறுகையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் நாளான நேற்று தஞ்சைக்கு குறைந்த அளவே கடல்மீன்கள் விற்பனைக்கு வந்தன. இதனால் விலை அதிகரித்து காணப்பட்டது. விற்பனையும் குறைவாகத்தான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் கடல்மீன்கள் விற்பனைக்கு வரும். அப்போது விலையும் குறைந்து காணப்படும்" என்றார்.


Next Story