தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவிடத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு


தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவிடத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு
x

ராணிப்பேட்டையில் தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவிடத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அப்போது வரலாறுகளை தெரிந்து கொள்ள பதாகைகள் வைக்க கலெக்டரிடம் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவிடத்தில் அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அப்போது வரலாறுகளை தெரிந்து கொள்ள பதாகைகள் வைக்க கலெக்டரிடம் அறிவுறுத்தினார்.

அமைச்சர் ஆய்வு

ராணிப்பேட்டை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் 1996-ம் ஆண்டு முதல் குறைந்த வாடகையில் திருமணங்கள், பொது நிகழ்ச்சி நடத்திட பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த மண்டபம் தனியார் ஒப்பந்ததாரிடம் ஒப்படைக்கப்பட்டு நகராட்சிக்கு ஆண்டு வருமானம் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் பராமரித்து வந்த ஒப்பந்ததாரர் இறந்து விட்டதால், வாடகை பாக்கி செலுத்தாமல் மண்டபம் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.

இந்த திருமண மண்டபத்தினை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மண்டபத்தினை முழுமையாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், திட்ட அறிக்கை தயார் செய்யவும் கலெக்டரை, அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பதாகைகள் வைக்க அறுவுறுத்தல்

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணி சமாதி அமைந்துள்ள இடத்தினை பார்வையிட்டு அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார். அப்போது சிதிலமடைந்த இந்த இடத்தினை புனரமைத்து, போதிய வழிகாட்டி பலகைகள் மற்றும் தேசிங்கு ராஜா, ராணியின் வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் அமைத்து உரிய மரியாதை வழங்கிடும் வகையில் இவ்விடத்தினை மேம்படுத்த கலெக்டரை கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், துணை தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Next Story