துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ள திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கிராமிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அலுவலக கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை மேற்கொள்ளவும், இரவு நேர ரோந்து பணியினை தீவிர செய்யவும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகனுக்கு வழங்கினார்.
தொடர்ந்து திருவண்ணாமலை கிராமிய உட்கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 31 போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
ஆய்வின் போது கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டீபன், சவுந்தர்ராஜன், பழனி, உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.