எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை: சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்.பி. உதயக்குமாரை நியமித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை எதிர்க்கட்சி தலைவரின் இருக்கை அருகிலேயே இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் அப்பாவு எந்த முடிவும் எடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அருகருகே இருக்க வேண்டும். இதுதான் மரபு. இதை பல முறை கோடிட்டு காட்டியும் சபாநாயகர் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார். சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:-
பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சி தலைவர் தங்கள் கட்சிக்கு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமார் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கி தருவது தொடர்பான பிரச்சினை குறித்து தொடர்ந்து இந்த அவையில் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்களும், அது சட்டமன்றத்தில் சபாநாயகருக்கான உரிமை என்று சொல்லி, ஏற்கனவே, இதே அவையில் அவைத்தலைவராக இருந்த தனபால் தந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பதில் அளித்து வருகிறீர்கள்.
இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவன செய்யுமாறு தங்களிடம் நான் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.